பக்கிங்ஹாம் அரண்மனை பற்றிய முழு விபரம் !!!!. - tamilaaa 360

jio

பக்கிங்ஹாம் அரண்மனை பற்றிய முழு விபரம் !!!!.


பக்கிங்ஹாம் அரண்மனை இங்கிலாந்து மன்னர்களின் அதிகாரப் பூர்வமான இருப்பிடம். மன்னர்களின் ஊர்வலம் இங்கிருந்து தான் புறப்படும். இந்த அரண்மனை இருந்த இடத்தில் 1701 ஆம் ஆண்டு ட்யூக் ஆப் பக்கிங்ஹாம் ஒரு மாளிகையைக் கட்டினார். அந்த மாளிகையை மூன்றாம் ஜியார்ஜ் 1762 ஆம் ஆண்டு 21000 பவுண்டுகளுக்கு விலைக்கு வாங்கினார். 

நான்காம் ஜியார்ஜ் மன்னர்தான் அந்தப் பழைய மாளிகையை இடித்து விட்டு புதிய மாளிகையைக் கட்டினார். இந்தப் புதிய மாளிகையை வடிவமைத்துக் கட்டிக் கொடுத்தது ஜான் நாஷ் எனும் கட்டடச் சிற்பக் கலைஞர். இந்த மாளிகை 1825 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டது.

இன்று ஹைட் பூங்காவின் வடகிழக்கு மூலையில் வரலாற்றுச் சின்னமாக விளங்கும் சலவைக் கல் கவான் வளைவுதான் ஆரம்பத்தில் இந்த மாளிகையின் நுழைவாயிலாக இருந்தது. நாஷ் கட்டிய கட்டடத்தில் இப்போது எஞ்சியிருப்பது தோட்டத்தை நோக்கியுள்ள பகுதிதான். 

கிழக்கு நுழை வாயில் 1913 ஆம் ஆண்டு சர். ஆஸ்டன் வெப் என்பவரால் வடிவமைத்துக் கட்டப் பட்டது. விக்டோரியா மகாராணியின் சிலையும் அங்கே நிறுவப்பட்டது.நான்காம் ஜியார்ஜ் மன்னர் இந்த மாளிகையைப் புதுப்பித்துக் கட்டியபோதிலும் அவர் அங்கு சென்று வசிக்கவில்லை. அதே போல் நான்காம் வில்லியமும் அங்கு வசிக்கவில்லை. உண்மையில் 1834 ஆம் ஆண்டு பாராளுமன்றம் தீக்கிரையானபோது இந்த மாளிகையைப் பாராளுமன்றமாக பயன்படுத்திக்கொள்ளும்படி அவர் கூறினார். 

விக்டோரியா மகாராணி அரியணை ஏறியவுடன் 1837 ஆம் ஆண்டு இந்த அரண்மனையில் குடியேறினார். அன்று முதல் இந்த மாளிகை பிரிட்டிஷ் மன்னர்களின் இருப்பிடம் ஆயிற்று.பக்கிங்ஹாம் அரண்மனையில் அறுநூறுக்கும் மேற்பட்ட அறைகளும் மற்றும் ஏராளமான கூடங்களும் உள்ளன. இந் மாளிகையின் முன்னால் ஒவ்வொரு நாளும் காவலர்கள் மாறும் சடங்கைக் கண்டுகளிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் காத்திருப்பார்கள்.

கருத்துகள் இல்லை