மெம்பிஸ் - வெள்ளை அரண் !!!!.
நாகரிக வளர்ச்சியின் வரலாற்றில் பதிவான முதல் பொறியியல் சாதனையாக மெம்பிஸ் நகர சுவர்களைச் சொல்லலாம். எகிப்தில் நைல் நதியின் மேற்குக் கரையில் கெய்ரோவிற்கு தெற்கு ஏறக்குறைய 24 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இந்த நகர். வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே இங்கு குடியிருப்புகள் அமைந்திருந்தன. பழைய எகிப்து ராஜ்ஜியத்தின் தலைநகர் இது.
மெனஸ் எனும் மன்னன் எகிப்து முழுவதையும் வென்று தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். 558 ஆண்டு காலம் அதாவது கி.மு. 2778 ஆம் ஆண்டிலிருந்து கி.மு. 2220 ஆம் ஆண்டு வரை 'பழைய குடியரசு' என்று வழங்கப்படும் இந்த மன்னர் பரம்பரை ஆட்சி நடந்தது. முன்னால் தனித்தனி ராஜ்ஜியமாக இருந்த மேல் எகிப்து கீழ் எகிப்து எல்லையில் மெனஸ் அமைத்த புதிய தலைநகரே மெம்பிஸ். இந்த நகரைச் சுற்றி மிகப் பெரிய வெள்ளை சுவரை எழுப்பினான் இந்த மன்னன்.
இந்தச் சுவர் முதலில் செங்கற்களினால் கட்டப்பட்டு ஜிப்ஸத்தால் பூசப்பட்டது. கிமு 5 ஆம் நூற்றாண்டு வாக்கில் அந்தப் பகுதியைச் சுற்றிப் பார்க்க வந்திருந்த கிரேக்க வரலாற்றாசிரியர் ஹீரோடோட்டஸ், நைல் நதியைக் கடக்கும்போது முத்துப்போல் வெண்மையான கண்ணாம்புக் கல்லினால் கட்டப்பட்ட கம்பீரமான சுவர் பார்த்தவர்களைப் பிரமிக்க வைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் சுவரின் மேல் முப்பது முதல் 75 அடி உயர சிலைகளும் இருந்தனவாம்.
இந்த நகரின் நடுவே ஒரு அரண் - வெள்ளை மாளிகை. இது ஒரு செய்குன்றம் அதாவது செயற்கையாக அமைக்கப்பட்ட குன்று. இதைச் சுற்றி 40 அடி சுவர். சுண்ணாம்புக் கல்லினால் ஆனது இச்சுவர். இக்குன்றின் மேலே அரண்மனைகள், படையரண்கள் கட்டப்பட்டிருந்தன. நகருக்கு வெளியே நைல் நதியின் மேற்கே பல மைல்கள் தூரத்தில் பிரமிட்டுகள் வானைக் கிழித்துக் கொண்டு எழுந்திருந்தன.
இந்த நகருக்குப் பல பேர்கள் ஹீரோடோட்டஸ் காலத்தில் இதன் பெயர் மென்னோஃபெர். வெள்ளை அரண் நகர் என்றும் 'ட்டா’ எனும் கடவுளின் ஆத்மா வசிக்குமிடம் என்றும் இதைக் குறிப்பிடுவர். அலெக்ஸாண்டிரியா நகர் உருவாகும் வரை மெம்பிஸ் எகிப்தின் முக்கிய நகர்களில் ஒன்றாக இருந்தது. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் எகிப்து அரபியர்கள் ஆதிக்கத்தின் கீழ் வந்தபோது மெம்பிஸ் நகரக் கற்களை அவர்கள் பெயர்த்து எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.
Post a Comment