இமயமலையின் கேதாரிநாத் சிவன் கோயில் !!!!.
நமது ஆன்மிக வளர்ச்சியின் சின்னமாக இமயமலையைச் சொல்லலாம். அங்கு சிவபெருமா னுக்கு ஒரு கோயிலும் விஷ்ணுவிற்கு ஒரு கோயிலும் உள்ளது. விஷ்ணு கோயில் இருக்குமிடம் பத்ரிநாத். சிவபெருமான் கோயில் கொண் டிருக்குமிடம் கேதாரிநாத். இதைக் கேதார் என்றும், ஸ்ரீ கேதாரிநாத் என்றும் கேதாரேஸ்வரர் கோயில் என்றும் கூறுவார்கள். இக்கோயில் பாண்டவர்களினால் கட்டப்பட்டது என மரபுவழிக் கதைகள் கூறுகின்றன. இக்கோயிலுள்ள கல்வெட்டின்படி மால்வா மன்னன் போஜனால் கட்டப்பட்டது என்று தெரிகிறது. ஒன்பதாம் நூற்றாண்டில் ஆதி சங்கரரினால் புதுப்பிக்கப்பட்டது.
கேதாரிநாத், கடல் மட்டத்தி லிகுந்து 3581 மீட்டர் (11937 அடி) உயரத்தில் உள்ளது. ருத்ர-ஹிமாலய மலைச்சரிவிலுள்ள இப்பகுதிக்கு சுமேரு பர்வதம் அல்லது பஞ்ச பர்வதம் என்று பெயர். கிழக்கு பார்த்து அமைந்துள்ள இக்கோயில் 600 மீட்டர் (2000 அடி நீளமும் 300 மீட்டர் (2000 அடி அகலமும் கொண்ட மேடையில் கட்டப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான கற்கட்டடமான இக்கோயில் பார்த்தவர்களைப் பிரமிப்பிற்குள்ளாக்கும். இதன் அருகே மந்தாகினி ஆறு சுற்றி வளைத்துச் செல்கிறது.
சாம்பல் வண்ணத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஒரு மண்டபமும் கர்ப்பகிரகமும் உள்ளது. நடுவில் கூம்பு வடிவில் திருவறை அமைந்துள்ளது. இதைச் சுற்றி பிரதட்சணப் பாதை உள்ளது. நுழைவாயிலில் சிவபெருமானின் வாகனமான நந்தியின் சிலை வைக்கப்பட்டுள்ளது. ரிஷிகேசத்திலிருந்து 223 கி.மீ தூரத்திலும் ருத்திர பிரயாகையிலிருந்து 81 கி.மீ. தூரத்திலும் கேதாரிநாத் உள்ளது. வெள்ளிப் பனிமலையின் பின்னணியில் ஆறுகளும் ஓடைகளும் சலசலவென்று ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் சாம்பல் வண்ணத்தில் திகழும் இக்கோயில் அற்புதமான கலைப்படைப்பு.
இக்கோயிலின் பின்னால் ஆதிசங்கரரின் சமாதியும் நினைவாலயமும் உள்ளது.
Post a Comment