ஆசியாவின் உயரமான டோக்கியோ டவர் (Tokyo Tower )
உலகிலேயே மிக உயரமான' கட்டடம் சிகாகோ நகரிலுள்ள ஸீயர்ஸ் டவர். இதற்கடுத்தப் படியாக உயரமான கட்டமைப்பு ஜப்பானிலுள்ள டோக்கியோ டவர். இது ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் உள்ளது. தெற்கு மத்திய டோக்கியோவில் அரண்மனை மைதானத்திற்கு தெற்கே மூன்று கி.மீ. தூரத்தில் ஷிபா பூங்காவில் அமைந்துள்ளது.
பாரிஸ் நகரிலுள்ள ஈஃபில் கோபுரபாணியிலேயே கட்டப்பட்ட இந்தக் கோபுரத்தின் உயரம் 333 மீட்டர்கள் (11O அடிகள்). ஜப்பானில் நிலநடுக்கமும் புயலும் சர்வ சாதாரணம். அதற்கு ஈடு கொடுக் கும் வகையில் இது அமைக்கப் பட்டுள்ளது. மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் அடிக்கும் காற்றையும் சமாளித்து நிற்கும்படியான உறுதியான கட்டமைப்பு இது.
டோக்கியோ நகரிலுள்ள எட்டு தொலைக்காட்சி நிலையங்களும் இந்த கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள ஆண்டெனாக்கள் மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அதேபோல் அங்கு மூன்று பண்பலை வானொலி நிலையங்கள் உள்ளன. அவையும் இங்குள்ள ஆண்டெனா மூலம் ஒலிபரப்பப்படுகின்றன. தவிர இங்கு ஒரு வானாய்வுக் கூடமும் உள்ளது.
இதிலே ஒரு அருங்காட்சியகமும் உள்ளது. பண்டைய காட்சிகளை விளக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட உருவங்கள் வைக்கப் பட்டுள்ளன. ஒலியும் ஒளியும் முறையில் நாடகக் காட்சிகள் போல் இவை விளக்கப்படுகின்றன. கிழக்கிலேயே இத்தகைய அருங்காட்சியகம் இது ஒன்றுதான்.
இங்கு மீன் காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற மீன் காட்சியகம் இது. அபூர்வமான பல வகையான எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீன்கள் இங்கே உள்ளன.
இந்த கோபுரத்தின் உச்சியில் டோக்கியோ நகரப் போலிஸ் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படக் கருவிகள் நகர போக்குவரத்தைக் கண்காணித்து ஒழுங்கு முறைப்படுத்த உதவுகின்றன.
Post a Comment